Home முதன்மைச் செய்திகள் மாவையின் மரணத்துக்கு நாம் தான் காரணம் என்றவர்களின் பின் பல்வேறு சக்திகள் உண்டு

மாவையின் மரணத்துக்கு நாம் தான் காரணம் என்றவர்களின் பின் பல்வேறு சக்திகள் உண்டு

by ilankai
மாவையின்-மரணத்துக்கு-நாம்-தான்-காரணம்-என்றவர்களின்-பின்-பல்வேறு-சக்திகள்-உண்டு

மாவை சேனாதிராசாவின் மரணத்திற்கு நாம் தான் காரணம் என விஷம பிரச்சாரம் செய்தமைக்கு பின்னால், அரச புலனாய்வு, வெளிநாட்டுச் சக்திகள்,ஊடுருவல் சக்திகள், மாற்றுக் கட்சிகள் என எல்லாமே இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும்  தெரிவிக்கையில், 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவைசேனாதிராஜாவின் இறுதிச் சடங்கில் விஷமப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதனால் இறுதி நிகழ்வில் குழப்பங்கள்ஏற்படக்கூடாது என்பதற்காக நாம் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. 

மாவை சேனாதிராஜாவின் வீட்டுக்கு நானும் பதில் செயலாளர் சத்தியலிங்கமும் சென்று சந்தித்து சுகயீனம் தொடர்பிலே கலந்துரையாடியிருந்தோம். ஆனால், நாங்கள் அரசியல் பேசியதாகவும், கடுந் தொனியில் கதைத்திருந்ததாகவும் சிவமோகன் மற்றும் சசிகலா ரவிராஜ் ஆகியோர் கூறியிருப்பது முற்றிலும் பொய்யானது. 

அது அவர்களின் கற்பனைவாதங்களே தவிர வேறொன்றும் இல்லை.மாவை சேனாதிராசா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதும் நானும் குலநாயகமும் மாவை சேனாதிராஜாவைச் சென்று பார்வையிட்டு இருந்தோம். அதன் பின்னர் நாங்கள் வருகின்றபோது மாவை சேனாராஜாவின் சகோதரி குலநாயகத்துடன் முரண்பட்டுள்ளார்.

மாவை சேனாதிராஜா இருப்பதற்குத் தனது வீட்டைக் கொடுத்தும், மாவை சேனாதிராஜா தாக்குதலில் காயமடைந்த பின்னர் அவரைப் பராமரித்ததும் குலநாயகம் தான். உண்மையில் மாவைக்கும் குலநாயகத்துக்கும் இடையே குடும்ப உறவு முறை இருந்தது.

ஆனால், மாவையின் சகோதரியின் பேச்சால் மனமுடைந்தகுலநாயகம் இறுதிச்சடங்கில் கூடக் கலந்துகொள்ளாமல் தவிர்த்திருந்தார். குலநாயகத்துக்கு நடந்த இந்தச் சம்பவம் எல்லாம் மிகவும் கவலைக்குரியது.

மாவை சேனாதிராஜா மரணமடைந்த பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுடன் தொடர்பு கொண்டு கட்சித் தலைமையகத்துக்கு அவரது புகழுடலைக் கொண்டுவர வேண்டிய தேவை இருக்கின்றது என்றும், ஆனபடியால் மாவையின் குடும்பத்தினருடன் கலந்து பேசி அந்த விடயத்தை நீங்கள் பொறுப்பெடுத்துச் செய்யுங்கள் என்றும் கேட்டிருந்தேன்.

அதன் பின்னர் எனக்கு அழைப்பெடுத்த சிறீதரன் தான் கதைத்திருப்பதாகவும், இந்த விடயத்தில்  முன்னேற்றம் இருப்பதாகவும், நீங்கள் வந்தால் தொடர்ந்து பேசலாம் என்றவாறாகவும் சொல்லியிருந்தார். 

இதற்கமைய நானும் சென்று பேசியிருந்தேன். இந்த விடயத்தில் சிறீதரன் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியும் இருந்தார். ஆனால், இறுதிச்சடங்குக்கு முதல் நாள் இரவு அழைப்பெடுத்தசிறீதரன் கட்சி அலுவலகத்துக்குப் புகழுடலைக் கொண்டு வருவதைக் குடும்பத்தினர் விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.

இதன் பின்னர் கட்சி உறுப்பினர்கள் 18 பேரின் பெயர் விவரங்களைப்  படங்களுடன் போட்டு மாவையின் மரணத்துக்குக் காரணமான துரோகிகள் என்றவாறாக பல இடங்களில் பனர்களை கட்டித் தொங்க விட்டிருந்தார்கள்.

உண்மையில் இதெல்லாம் மிகப் பெரிய அபாண்டமான விஷமப் பிரசாரம்தான். அந்தப் பிரசாரத்தில் வெளிப்படுத்திய அந்தக் கடிதம் கூட ஒரு கோரிக்கைக் கடிதம் மட்டும்தான். 

ஆனால், அதில் கையெழுத்து வைத்த அத்தனை பேரையும் துரோகிப் பட்டம் கட்டி அந்தக் கடிதத்தின் பிரதியைச் சிலர் காவிக் கொண்டு திரிந்தனர். இந்த விடயங்கள் எல்லாவற்றையும் தொகுத்து திட்டமிட்டு இதில் வெறுமனே தமிழரசுக் கட்சி சார்ந்தவர்கள்தான் இருக்கின்றார்கள் என்றில்லை. தமிழரசுக் கட்சியை ஓரங்கட்டலாம், ஒழித்துக் கட்டலாம் எனக் கங்கணம் கட்டியவர்களின் சதியும் இதில் இருக்கின்றதா என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்கின்றது.

அந்தக் காரணத்தினாலே காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கூட முறைப்பாட்டைப் பதிவு செய்திருக்கின்றேன். அந்த 18 பேரும் மத்திய செயற்குழு உறுப்பினர்கள். அவர்களால் என்னிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கட்சியின் தலைவர் என்ற வகையில் நானும் பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளேன். அது சம்பந்தமாக விசாரணைகள் நடக்கின்றன.  

இங்கு இன்னுமொரு விடயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். மாவைக்கும் எனக்கும் இடையிலான உறவு 30 வருடங்களாக இருக்கின்றன. மாவைக்காகத் தேசியப்பட்டியல் கேட்டு சம்பந்தனுடன் வாதாடியதும் நான்தான்.  அதுமட்டுமல்லாது கட்சிக்குள்ளும் வெளியிலும் மாவைக்கு எதிராக ஏதும் நடக்கின்றபோதும் அவருக்கு ஆதரவாக நின்று பேசியவனும் நான்தான். அப்படி எங்களுக்கிடையே நல்ல உறவு இருந்தது.

அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதனின் மரணச் சடங்கில் இப்படி ஒரு குழப்பமான வேலையைச் செய்தது தெய்வ நீதிக்கே மாறான ஒரு விடயம். இதை எல்லாம் யார் யார் செய்தார்கள் என்ற விசாரணையைப் பொலிஸார் ஆரம்பித்திருக்கின்றார்கள். 

இந்த விசாரணையைத் தொடர்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

இந்தத் துரோகத்தனத்தைச் செய்தது எமது கட்சிக்காரர் மட்டுமில்லை. அரச புலனாய்வு, வெளிநாட்டுச் சக்திகள், ஊடுருவல் சக்திகள், மாற்றுக் கட்சிகள் என எல்லாமே இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன என தெரிவித்தார். 

Related Articles