யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைந்துள்ள பௌத்த விகாரை தொடர்பாக அரசாங்கத்தில் எவ்விதமான பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
தனியாருக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்ற வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை இரவு முதல் அங்கு போராட்டம் ஒன்றுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் விகாரையை அகற்ற முடியாது எனவும், மாறாக விகாரைக் காணியின் உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் கருத்து தெரிவித்ததாக வெளிவந்த செய்திகளை மறுதலித்துள்ளார்.
அண்மையில் யாழ்ப்பாணம் சென்ற போது தம்மிடம் இந்த விடயத்தைப் பற்றிக் கூறியிருந்தார்கள்.
இதுவொரு பாரதூரமான விடயம் என்பதால், சகல தரப்பினரையும் இணைத்துக் கலந்துரையாட வேண்டும் என தீர்மானித்திருந்த போதிலும் அரசாங்க மட்டத்தில் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
இதனிடையே இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவராக இருந்தவரே தற்போது தையிட்டி விகாரைக்கு 14ஏக்கர் காணி தேவை என கேட்டு யாழ் மாவட்ட செயலருக்கு கடிதம் அனுப்பிய அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் என்ற அமைப்பின் தலைவர் என தெரியவந்துள்ளது.